கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கூறி அதிமுகவினர் வாக்கு சேகரிக்க வேண்டும் என விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் அருகே பனையபுரம் கிராமத்தில் நேற்று விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் அறிமுகக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரான அமைச்சர் சிவி சண்முகம் தலைமை தாங்கி பேசியது:
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இருக்குமா, இருக்காதா என பலரும் பேசிய நேரத்தில் எம்பி தேர்தலில் தோல்வியை சந்தித்தோம் . அதே நேரத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிமுகவிற்கு மறுவாழ்வு அளித்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை அளித்த தொகுதி விக்கிரவாண்டி தொகுதியாகும் .
கடந்த 2011 –2016-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, அராஜகம் ஆகியவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு திமுக வினர் உங்கள் முன் வருகின்றனர் . கருணாநிதி காலத்திலிருந்து திமுகவினர் எப்போது சொன்னதை நிறைவேற்றியுள்ளனர். 2 ஏக்கர் நிலம் கொடுத்தார்களா? .
முதல்வர் பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பெண்களுக்காக ஆண்டுக்கு 6 சிலிண்டர் , மாதம் ரூ. 1,500 என திட்டம் அறிவித்துள்ளார். கரோனா காலத்தில் பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்கிய அரசு அதிமுக அரசு. ரூ. 12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் ரத்து, நகைக்கடன் ரத்து, விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்த ஒரே முதல்வர் பழனிசாமிதான்.
நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் இந்தாண்டு மருத் துவ படிப்பில் 436 பேர் சேர முடிந்தது. இதுவே கடந்த ஆண்டு 6 பேர் தான் சேர முடிந்தது.
எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காமல் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன், பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில துணைத்தலைவர் அன்பு மணி, துணை பொதுச் செயலாளர் தங்கஜோதி, பழனிவேல், தமாகா மாவட்ட தலைவர் தசரதன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், முகுந்தன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.