அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு பம்பர் பரிசு காத்திருப்பதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.
கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியது:
வாக்குப்பதிவிற்கான காலம் குறைவாக உள்ளது. கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடலூர் நகராட்சி 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்தையும் 3 பிரிவுகளாகவும், வடக்கு ஒன்றியத்தை 3 பிரிவுகளாகவும், தெற்கு ஒன்றியத்தை ஒரு பிரிவாக பிரித்து நிர்வாகிகளை நியமித்துள்ளோம். அந்தந்த பகுதியில் உள்ள கூட்டணிக் கட்சியினரும் தங்களது நிர்வாகிகளை இணைத்து பணியாற்ற வேண்டும்.
மக்களுக்கு பல்வேறு வசதிகளை அதிமுக அரசு செய்துக் கொடுத்துள்ளது.விவசாயக் கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு வழங்கியுள்ளோம். மகளிருக்கு பொற்காலம் இந்த அரசு. ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்ற அறிவிப்பை முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு பம்பர் பரிசு காத்திருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை வெத்து அவுட்டு. செய்யக்கூடியதை மட்டுமே அதிமுக அறிக்கையாக கொடுக்கும். எனவே முதல்வர் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதிமுக நகர செயலாளர் குமரன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், தமாகா மூத்த தலைவர் வெங்கடேசன், பாமக நிர்வாகிகள் பழதாமரைக் கண்ணன், சண்முத்துக்கிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் சாய்சுரேஷ், பொன்னிரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.