சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத் திற்குட்பட்ட யோகாசன கல்வி மையம் யோகக் கலையை மாணவர்கள், பொதுமக்கள், சிறைவாசி என்று பலதரப்பட்ட மக்களுக்கும் தொடர்ந்து பரப்பி வருகிறது.
பதஞ்சலி முனிவர் யோகக் கலையை முறையாக வகுத்துக் கொடுத்தவர். இவர், குறிப்பிட்ட காலம் சிதம்பரத்திலும் வாழ்ந்து வந்தார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் என்னும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இந்நூல் கி.மு 400 ஆண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. யோகா உடலையும், மனதையும், புத்துணர்ச்சியுடன், இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
யோகக் கலையின் சிறப்பை உணர்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யோகக் கல்வியை 1964-ம் ஆண்டு தங்கள் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இந்த மையம் 1998-ம் ஆண்டு புதுப்பொலிவாக்கப்பட்டது.
இந்த யோக கல்வி மையத்தில் உடல் நலம், மன வளம், ஆன்மிக வளம் சார்ந்த பயிற்சி முறைகள் அளிக்கப்படுகின்றன. அனைத்து துறை சார்ந்த மாணவர்களுக்கும் இப்பயிற்சி குறிப்பிட்ட அளவில் போதிக்கப்படுகிறது.
யோகக் கலையின் சிறந்த கோட்பாடுகளையும், வாழ்வியல் யோகம் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் மக்கள் அறியும் பொருட்டு முப்பரிமான செயல்பாட்டில் ஆய்வு, கல்வி, பயிற்சி என்ற முறையில் செயல்பட்டு வருகிறது.
இங்கு பட்டயம், முதுகலை பட்டயம், முதுகலை பட்டய யோக சிகிச்சை, யோக முனைவர் பட்ட ஆய்வு போன்ற கல்வி முறைகள் போதிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் பொதுமக்கள், வயோதிகர்கள் பயன்பெற இலவச யோக வகுப்புகளை இந்த மையம் நடத்தி வருகிறது. இந்த மையத்தினர் யோக கல்வி முறையை சபர்மதி சிறைச்சாலை திகார், புழல் சிறைச்சாலை சிறைவாசிகளுக்கு போதித்து வருகின்றனர்.
தற்போதைய துணைவேந்தர் முருகேசன், பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் ஆகியோரின் வழிக்காட்டுதல் படியும், புல முதல்வர் செல்வம் மேற்பார்வையில் யோகத் துறை இயக்குநர் வெங்கடாசலபதி இந்த பணிகளை செய்து வருகிறார்.
தொடர்புக்கு
இங்கு யோகக் கல்வி பயில அண்ணாமலை பல்கலைக்கழக யோகா பயிற்சி மைய இயக்குநர் கே. வெங்கடாஜலபதியை 99441 18491 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.