தமிழகம்

களைப்பைப் போக்கும் டேப் கட்டில்கள்

ந.முருகவேல்

‘கட்டில்கள்’ மனித வாழ்வில் பிரிக்க முடியாத இரண்டற கலந்த ஒன்று.

உழைத்து களைத்தவனுக்கும், உறக்கமே கதியென்யென்று இருப் பவனுக்கும் பிடித்துப் போகும் பொருள் அது.

வீட்டின் முற்றத்தில் கயிற்றுக் கட்டில்கள் போட்டு உறங்கிய பழைய காலம் போய், அடுக்கங்களில் பொதிந்து ஆஜானுபாகுவாய் கட்டில்களை தேடும் காலம் வந்து விட்டது.

ஆனாலும், நார், கயிற்றுக் கட்டில் களும், கூடவே எப்போதும் தனக்கென தனியிடம் பிடித்திருக்கும் நைலான் பட்டை கட்டில்களும் இன்றைக்கும் குறிப்பிட்ட அளவில் விற்பனையாகி கொண்டிருக்கின்றன. பல கிராமங்களில் படுத்துறங்கும் கட்டில் என்பதைத் தாண்டி, வீட்டின் முற்றத்தில் வத்தல், வடகம் காய வைக்க இது போன்ற நைலான் மடக்கு கட்டில்களை இன்றைக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இரும்பு குழாய்களில் நைலான் பட்டை அல்லது துணிப்பட்டையைக் கொண்டு கோர்த்து பின்னப்படும் இக்கட்டில்கள் இடத்தை அடைக்காது. மடக்கி ஒரு ஓரமாக வைத்து விடலாம் என்ற வசதி, இதை தொடர்ந்து வர்த்தக ரீதியாக வெற்றியடைய வைத்திருக்கிறது.

ஊர் ஊராக விர்பனை

இக்கட்டில்களை தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர் கள் கட்டில்களின் விளிம்புகளோடு ஊர், ஊராக எடுத்துச் சென்று விற்பனை செய்து நைலான் பட்டையை பின்னி வழங்கி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற கட்டில்களை விற்பனை செய்து வருகிறார் எம்.செல்லமுத்து.

“ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவன் நான். இத்தொழிலில் ஈரோடு, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நைலான் பட்டையால் கட்டப்படும் கட்டில் ரூ.1,200 முதல் 1,500 வரையும், நூல் பட்டையிலான கட்டிலை ரூ.600 வரையிலும் விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் பின்னி தரும் கட்டிலில் 3 மாதம் வரை எந்த பிரச்சினையும் எழாது. அதன்பின்முறையாகப் பராமரித்தால் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இரும்புச் சட்டங்கள் என்பதால் மீண்டும் பின்னிக் கொள்ளலாம்” என்கிறார்.

பெட்ரோல் விலை

“இரு சக்கர வாகனத்தில் ஊர் ஊராகச் சுற்றுவதுண்டு. பெட்ரோல் விலை கட்டுப்படியாகவில்லை. அதனால் தற்போது ஒரு ஊருக்குச் சென்று, குறிப்பிட்ட இடத்தில் தங்கி, வாகனத்தை நிறுத்தி அதிலிருந்தவாறே விற்பனை செய்து வருகிறேன்” என்கிறார்.

SCROLL FOR NEXT