தமிழகம்

எம்ஜிஆர் போட்டியிட்ட மதுரை மேற்கு தொகுதியில் - செல்லூர் கே.ராஜூ ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா?

செய்திப்பிரிவு

மதுரை மேற்குத் தொகுதியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டு மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இந்தத் தொகுதியில் போட்டியிடுவதை கட்சியினரிடம் பெருமையாகக் கூறி வந்தார்.

இந்த முறை கள நிலவரம் முன்புபோல் இல்லாததால் தொகுதி மாற நினைத்தார். அதனால் மதுரை தெற்கு, வடக்கு தொகுதிகளுக்கும் சேர்த்து விருப்ப மனு அளித்தார். ஆனால், கட்சித் தலைமை அவரை மேற்குத் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது. அத னால், வேறு வழியின்றி இந்த தொகுதியில் செல்லூர் கே.ராஜூ மூன்றாவது முறையாகப் போட்டி யிடுகிறார்.

முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம், வளர்மதி ஜெபராஜ் ஆகியோரும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானவர்கள். பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை சபாநாயகராகத் தேர்வு செய்ததும் இந்தத் தொகுதிதான்.

இந்தத் தொகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ 2011, 2016 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த முறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து திமுகவில் சின்னம்மாள் என்பவர் போட்டியிடுகிறார். அமைச்சரை எதிர்த்து போட்டியிடுவதால் சின்னம்மாள் தேர்தல் செலவுக்கு அமைச்சருக்கு இணையாக கட்சி மேலிடம் தாராளமாக நிதி வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி னருக்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. சென்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாசுகி இந்த தொகுதியில் அமைச்சருக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. இது திமுக வேட்பாளர் சின்னம்மாளுக்கு கூடுதல் பலம்.

மேலும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கடந்த மக்களவைத் தேர்தல், வரும் பேரவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் யாருக்கும் ‘சீட்’ வாங்கிக் கொடுக்கவில்லை. அதனால், அவர்கள் அமைச்சர் மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்களை மதுரை மாநகராட்சி தேர்தலில் ‘சீட்’ பெற்றுத் தருவதாக சமாதானம் செய்து வருகிறார்.

ஆளும் கட்சி செல்வாக்கு, அமைச்சரின் பண பலம் ஆகியவை அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது. இருப்பினும் இந்த முறை வெற்றிக்காக அமைச்சர் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

SCROLL FOR NEXT