புரசைவாக்கம் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் இருந்து 8 சிறுவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
சென்னை புரசைவாக்கம் கெல்லீசில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெறும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்படுகின்றனர். நேற்று காலை 9 மணியளவில் முதல் தளத்தில் உள்ள அறையில் தங்கியிருந்த 8 சிறுவர்கள் திடீரென கிரில் கேட்டை உடைத்து வெளியே வந்தனர். அவர்கள் சீர்திருத்த பள்ளியின் பின்பக்க சுவர் வழியாக ஏறிக்குதித்து வெளியில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் தலைமைச் செயலக காலனி போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சிறுவர்கள் அனைவரும் சிந்தாதிரிப்பேட்டை, தாம்பரம், பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஓட்டேரி சுடுகாடு வழியாக தப்பிச் சென்று இருப்பது விசாரணையில் தெரிந்தது.
கடந்த மாதம் இதே சீர்திருத்தத் பள்ளியில் இருந்து 17 சிறுவர்கள் கதவை உடைத்து தப்பிச் சென்றனர். இதில் 7 பேர் மட்டுமே சிக்கினர். மற்றவர்களை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மேலும் 8 பேர் தப்பிச் சென்றுள்ளனர். இங்கு கடந்த 6 மாதங்களில் 4 முறை சிறுவர்கள் தப்பி சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன.