இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில்வசிக்கும் தமிழர்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள். 
தமிழகம்

மலையாள வேட்பாளர்கள்; தமிழக வாக்காளர்கள் அண்டை மாநிலத்தில் விநோத தேர்தல் பிரச்சாரம்: 70 சதவீதத்துக்கு மேல் தமிழர்களே வசிப்பதால் இந்நிலை

செய்திப்பிரிவு

இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், கேரள வேட்பாளர்கள் பலரும் தமிழிலேயே பேசி பிரச்சாரம் செய்வதுடன், அவர்களுக்கான சலுகைகளையும் அறிவித்து ஆதரவை பெறும் நிலையில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தின் எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. மலைச்சரிவுகளைக் கொண்ட இப்பகுதியில் தேயிலை, ஏலக்காய் எஸ்டேட்கள் அதிகளவில் உள்ளன. இந்திய அளவில் ஏலக்காய்கள் அதிகம் விளையும் பகுதி இடுக்கி மாவட்டம்தான்.

இங்கு பெரும்பாலும் தமிழர்களே அதிகம் உள்ளனர். தோட்ட வேலைக்காகச் சென்றவர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே அங்கு குடியேறி விட்டனர். மேலும் தேனி மாவட்டம், கம்பம், தேவாரம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் தினக்கூலிகளாக சென்று வருகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பஞ்சோலை, இடுக்கி, பீர்மேடு, தொடுபுழா உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் தொடுபுழா, இடுக்கி தவிர்த்து இதர மூன்று தொகுதிகளிலும் பூர்வீகத் தமிழர்களே அதிகம் உள்ளனர்.

இவர்கள் அங்கு வாக்கு உரிமை உள்ளிட்டவற்றைப் பெற்று நிரந்தரமாக அங்கு வசித்து வருகின்றனர். அமைவிடம் கேரளா என்றாலும் தமிழகத்தில் இருப்பதைப் போன்றே இங்கு தமிழ்பலகைகள் இருப்பதுடன் மலையாளம் தெரிந்தாலும் அனைவரும் தமிழிலேயே உரையாடி வருகின்றனர்.

தேவிகுளம் சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தளவில் 70 சதவீதத்துக்கும் மேல் தமிழர்களே உள்ளனர். இதேபோல் உடும்பஞ்சோலை, பீர்மேடு தொகுதிகளில் தலா 30 சவீதத்திற்கும் மேல் தமிழர்களே வசித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் பூர்வீகத் தமிழர்களின் வாக்குகள் இங்கு போட்டியிடுபவர்களின் வெற்றியைத் தீர்மானித்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு பல தமிழர்கள் இங்கு பொறுப்பில் உள்ளனர். இங்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் இங்கு இருப்பதுடன் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள தொகுதிகளில் மலையாளிகள் மற்றும் தமிழர்களும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். பெரும்பாலும் இவர்கள் மாநில பாகுபாடு மனோநிலையில் இருப்பதில்லை. தேவிகுளத்தில் மட்டும் பல ஆண்டுகளாக தமிழக வேட்பாளர்கள் போட்டியிட்டு மாறி மாறி வென்று வருகின்றனர். மற்ற தொகுதிகளில் மலையாள வேட்பாளர்களே அதிகளவில் வெல்கின்றனர்.

மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட மூன்று அணிகளாக இங்கு போட்டியிருந்தாலும் இக்கட்சி வேட்பாளர்கள் தமிழக வாக்காளர்களின் ஆதரவை பெறும் நிலையிலேயே உள்ளனர். இதனால் மற்ற பகுதிகளில் மலையாளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் மறையூர், வண்டிப்பெரியார், சின்னக்கானல், சாந்தாம்பாறை, மூணாறு, காந்தலூர், குமுளி, பள்ளிவாசல், ராஜகுமாரி, வட்டவடா, ஆனைவிலாசம், நெடுங்கண்டம், வெள்ளத்தூவல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழிலேயே பேசி தங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த தேர்தலில் இடுக்கி தொகுதியில்ரோசிஅகஸ்டின் (கேரள காங்கிரஸ்), பீர்மேடு தொகுதியில் பிஜூமோள்(இந்திய கம்யூனி்ஸ்ட்) உடும்பஞ்சோலையில் எம்எம்.மணி(மார்க்சிஸ்ட்) தேவிகுளம் தொகுதியில் ராஜேந்திரன் (மார்க்சிஸ்ட்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் இருவரைத் தவிர மற்ற வேட்பாளர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

தேயிலைத் தோட்டங்களும், அது சார்ந்த தொழிலாளர்களும் அதிகம் இருப்பதால் கூலி உயர்வு, நிர்வாக பிரச்சினையை சரி செய்தல், ஊதிய ஒப்பந்தம், காப்பீடு உள்ளிட்டவற்றை தமிழகப் பகுதியில் முன்வைத்து கேரள வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது குறித்து மூணாறைச் சேர்ந்ததமிழர்கள் கூறுகையில், பல தலைமுறைகளுக்கு முன்பே இங்கு குடிவந்தவர்கள் நாங்கள். கேரளவாசிகளாக மாறிவிட்டதால் இந்தச் சூழலில் ஒன்றி விட்டோம்.

எங்களது உறவினர்கள் பலர் தேனி மாவட்டத்தில் உள்ளனர். தீபாவளி, பொங்கல் மற்றும் இதர விடுமுறை நாட்களிலும் அங்கு சென்று வருவோம். தமிழர்கள் அதிகம் உள்ளதால் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கும் நிலை இங்குள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT