திமுக, அதிமுக இரண்டுமே சமமான தீய சக்திகள் தான் என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமல் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் எனக் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்கள். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கலந்து கொண்டு பேசினார்.
மக்கள் நீதி மய்யம் தலைமையில் உருவாகியுள்ள 3-வது அணியின் தேவை குறித்து கமல்ஹாசன் எடுத்துரைத்தார். மேலும் அதிமுக, திமுக இரண்டுமே தீய சக்திகள் தான் எனத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
"இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு அணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. ஏனென்றால் திமுக, அதிமுக இரண்டுமே சமமான தீய சக்திகள் தான். ஆகையால் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் மூன்றாவது வாய்ப்பாக நாங்கள் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். அதில் வெற்றியும் பெற்றுக் காட்டுவோம்.
தேர்தலில் இதர கட்சிகளின் வாய்ப்பை சிதைப்பதற்காக மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் தான் களமிறங்கியுள்ளோம். தங்களை பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கும் திரைக்கதை ஆசிரியர்கள் திமுகவில் தான் இருக்கிறார்கள்.
தமிழகம் விற்பனைக்கு அல்ல, தமிழ் மக்களும் விற்பனைக்கு அல்ல. அவர்களின் வாக்குகளும் விற்கப்படாது. ஏழை மக்களுக்கென்று ஒரு விசுவாசம் இருக்கிறது. இன்று ஒரு மாற்று கிடைத்துவிட்டது. அவர்கள் இரு கட்சிகள் வழங்கும் பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். ஆனால், சிலர் வாக்குகளை எங்களுக்கும் அளிப்பார்கள். அதிமுகவை யாரும் எதிர்க்க வேண்டாம், அதுவே உட்கட்சிப் பூசலால் அழிந்துவிடும். திமுகவுடன் தான் எங்களின் போட்டி.
திமுக அரசியலுக்கு வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. இன்று திமுகவை அரசியலைவிட்டு ஒதுக்க வேண்டியுள்ளதற்கும் காரணம் இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் சாதி பார்த்து வாக்களிப்பது குறைந்து வருகிறது. ஆகையால் தான் மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுவில் சாதி என்ற பிரிவையே நீக்கிவிட்டேன்"
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.