அமைச்சர்களை எதிர்த்து பலமான வேட்பாளர்களை திமுக நிறுத்தும் என எதிர்பார்த்த நிலையில், ஒரு சில அமைச்சர்களை எதிர்த்து மட்டும் பலமான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு மற்ற தொகுதிகளை கூட்டணிக்கும் விட்டுக் கொடுத்துள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுகவே நேரடியாக போட்டியிடும் என்றும், அந்தத் தொகுதிகளில் செல்வாக்குள்ள பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமைச்ர்கள் போட்டியிடும் தொகுதிகள் பல கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதோடு, போட்டியிடும் தொகுதிகளில் பலமான வேட்பாளர்களை நிறுத்தாமல் சாதாரண நிர்வாகிகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் புறநகர் திமுக மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி அல்லது திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன் போன்ற பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலில் இருமுறை தோல்வியடைந்த சேடப்பட்டி முத்தையா மகனுக்கு திருமங்கலத்தில் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து, யாரும் எதிர்பார்தவகையில் சின்னம்மாள் என்பவருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டது.
ஆர்.பி.உதயகுமாரும், செல்லூர் கே.ராஜூம், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை அதிகமாக விமர்சித்தவர்கள். அந்த அடிப்படையில் திமுகவினர் இவர்களை எதிர்த்து பலம் வாய்ந்த நல்ல போட்டிக்கொடுக்கக்கூடியவர்கள் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்த்தநிலையில் அதற்கு நேர்மாறாக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடும் தொகுதியை திமுக, அதன் கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கியது.
அதுபோல் சங்கரன்கோவிலில் விஎம்.ராஜலெட்சுமி எதிர்த்து ஈ.ராஜா என்பவரையும், திருச்சி கிழக்கில் வெல்லமண்டி என்.நடராஜனை எதிர்த்து அந்த மாவட்டத்தில் பெரிய அறிமுகம் இல்லாத சென்னையை சேர்ந்த இணிக்கூர் இருதயராஜ் நிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் என்ற 37வயது இளைஞர் களமிறக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் சாதாரண தொண்டர் தான் ஆனால் வெற்றி வேட்பாளர் என்று பதிலளித்தார்.
இருப்பினும், தமிழகம் முழுவதும் பெரும்பான்மை அமைச்சர்கள் தொகுதிகளில் சாதாரண வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தேனியில் மட்டும் துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடியில் தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அதுபோல் சில அமைச்சர்களை எதிர்த்து பலமான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். அமைச்சர்களை எதிர்த்து பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்படாததால் திமுகவே, அமைச்சர்கள் வெற்றிக்கு வழிவிடுகிறதோ என்று அக்கட்சியினர் ஆதங்கம் அடைந்துள்ளனர்.