தமிழகத்தில் போட்டியிடும் 25 தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு இறுதி நிலையை எட்டியுள்ளது. இதில், தம் குடும்பத்தாரைத் தேர்தலில் களம் இறக்க தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலரும் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 13) மாலை அல்லது நாளை (மார்ச் 14) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்சிக்கு மொத்தம் 25 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
இதில், காங்கிரஸின் எட்டு எம்எல்ஏக்களின் தொகுதிகளில் ஆறு மட்டுமே இந்த முறை கிடைத்துள்ளன. இருவரின் தொகுதிகளான முதுகுளத்தூரும், தாராபுரமும் திமுக வசம் சென்றுவிட்டன.
காரைக்குடியின் எம்எல்ஏவும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவருமான கே.ஆர்.ராமசாமியின் பழைய தொகுதியான திருவாடானையில் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு, திருவாடானையில் ராமசாமி ஐந்துமுறை வென்றவர் என்பது காரணம்.
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் காங்கிரஸுக்கான பங்கில் ஐந்து இடம் பெற்றுள்ளன. இவற்றில் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தார் எவரும் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.
மற்றவற்றின் பல தொகுதிகளைத் தன் குடும்பத்தாருக்கு பெற்றுத் தருவதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கெனவே, கடந்த மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத்திற்கும் வாய்ப்பளிக்கப்பட்டு எம்.பி.க்களாக உள்ளனர்,
இதுகுறித்து, 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரத்திடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன்படி, மக்களவை எம்.பி.யான திருநாவுக்கரசர் தனது மகன் ராமச்சந்திரனுக்காக அறந்தாங்கி தொகுதியைக் கேட்கிறார். தன் தந்தை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சமூக வலைதளங்களின் பிரிவின் பொறுப்பாளராக கட்சியில் நுழைந்தவர் ராமச்சந்திரன்.
மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்தாகூர் தனது மாமனாருக்காக மேளூர் தொகுதி கேட்டு வலியுறுத்துகிறார். இந்தத் தொகுதியை அவருக்காகவே திமுக விட்டுக் கொடுத்ததாகவும் பேச்சு உண்டு.
முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரான இளங்கோவன் தன் மகனான ஈ.வே.ரா. திருமகனுக்காக ஈரோடு கிழக்கு தொகுதியை கேட்கிறார். இந்த திருமகன், தமிழக இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவி வகித்தவர்.
தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் தலைவரான கே.ஆர்.ராமசாமி தம் மகனுக்காக காரைக்குடி தொகுதி கோருகிறார்.
ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் ஓமலூரில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறார். இவர் தற்போது காங்கிரஸின் 4 தமிழக செயல் தலைவர்களில் ஒருவர்.
வேளச்சேரி தொகுதியை தன் மகனுக்காக கேட்டு வந்த தங்கபாலு அதை கைவிட்டு விட்டதாகத் தெரியவந்துள்ளது. எனவே, இந்த தொகுதியை முன்னாள் எம்.பி.யான ஜே.எம்.ஹாரூனின் மகனும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ஹசன் மவுலானா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
முன்னாள் எம்எல்ஏவான மறைந்த ஊர்வசி செல்வராஜின் மகனான ஊர்வசி அமிர்தராஜா கேட்கும் ஸ்ரீவைகுண்டம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்காக முன்னாள் எம்.பி.யான விஸ்வநாதன் மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.