கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் வணிக நிறுவனங்கள் 10 நாட்கள் அடைக்கப்படும் என நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கரோனா பரவல் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ளது.
அதேநேரத்தில், தற்போது அண்டை மாநிலங்களில் நோய்ப் பரவல் அதிகம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் வணிகப்பகுதிகளில் அதிகமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் கடைகளுக்கோ, வணிக வீதிகளுக்கோ செல்லக்கூடாது.
திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் அந்நிறுவனத்தின் முன்புறம் சோப்பு அல்லது சோப்புநீர் கொண்டு (சேனிடைசர் இருப்பினும்) கைகளை கழுவும் வசதி கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
வயோதிகர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், கடைவீதிகளுக்கு செல்வது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். பேருந்துகள், கார்கள், ஆட்டோக்களில் பிரயாணம் செய்யும்போது சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். வணிக நிறுவனங்கள் அரசு அறிவுறுத்தியுள்ள கோவிட்- 19 தடுப்பு பற்றிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றவேண்டும்.
வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவும் வசதி, கை சுத்தம் செய்யும் திரவ வசதி, உடல் வெப்பப் பரிசோதனை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அவற்றை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தங்கள் நிறுவனம், கடையில் பணிபுரியும் பணியாளர்கள், சேல்ஸ்மேன், சிப்பந்திகள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அ
தேபோன்று, வாடிக்கையாளர்கள் கூட்டம் நெரிசல் அறவே தவிர்க்கப்பட வேண்டும். வியாபாரத்தின் போது சமூக இடைவெளி மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாதது அறியப்பட்டால், எவ்வித பாராபட்சமுமின்றி சம்பந்தப்பட்ட கடை, வணிக நிறுவனம் முன்னறிவிப்பின்றி 10 நாட்களுக்கு அடைக்கப்படும். அதன் பின்பும் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை மீறினால், கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக அகலும் வரை கடை அடைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.
வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அபராதம் விதித்தல் போன்ற சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்களை உள்ளடக்கிய 9 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும். அதனை மீறுபவர்கள்மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பொதுமக்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.