அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்குத் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நேற்று முன்தினம் இரவு முடித்த திமுக, அக்கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 12) வெளியிட்டது.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முன்னதாக, தேர்தல் அறிக்கையைத் தயாரித்த அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதன் வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் இந்தத் தேர்தலின் முதல் கதாநாயகன் எனவும், தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த தேர்தல் அறிக்கை தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் என்ற அவர், இதில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, முக்கியமான வாக்குறுதிகளை அவர் வரிசையாக வாசித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
* அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்குத் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்த வசதி செய்துத்தரப்படும்.
* பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய தொழிற்கல்விகள் பயில ஒற்றைச் சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் அனைவருக்கும் சாதி - மத வேறுபாடின்றிக் கல்விச் செலவை அரசு வழங்கும் என்ற கருணாநிதியின் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்புப் பெறுவதற்கு வசதியாக, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம், பிரெஞ்சு, மொழி, ஜெர்மனிய மொழி, ஸ்பானிய மொழி, அரபிக் மொழி, சீனமொழி, ஜப்பானிய மொழி, ரஷ்ய மொழி போன்ற மொழிகளைக் கற்றுத்தர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
* தமிழக மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, எய்ம்ஸ், ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளில் அதிக அளவு வெற்றி பெற அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசின் சார்பில் உயர்சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
* மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் போன்ற தேர்வுகளுக்கும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2 போன்ற தேர்வுகளுக்கும் ரயில்வே மற்றும் வங்கிகளால் நடத்தப்படும் பணியாளர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதற்கான மையங்கள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை ஆகிய மாநகரங்களில் தொடங்கப்படும்.
இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.