புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம். கிடைக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம் எனவும், பாமக தனித்து போட்டியிட்டால் புதுச்சேரியில் காங்கிரஸ் -திமுக வெற்றி பெற்று வாய்ப்பு ஏற்படும் எனவும் பாமக அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்தள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக பாஜக எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த முன்வரவில்லை என்பதால் தனித்து போட்டியிடுவோம் என பாமக அறிவித்தது.
இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை, பாமக அமைப்பாளர் தன்ராஜ் இன்று (மார்ச் 13) காலை தனியார் ஓட்டலில் சந்தித்து பேசினார். அப்போது பாமகவுக்கு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இல்லை என கூறியதால் பாமக தனித்து போட்டி என மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாமகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தனித்து போட்டிடும் முடிவை கைவிட முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தினார். ஆனாலும் அதனை பாமக ஏற்கவில்லை.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பாமக அமைப்பாளர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் தனித்து போட்டியிட முடிவு செய்தோம். தனித்து நின்றால் தொகுதிக்கு 2 ஆயிரம் வாக்குகள் குறையும். எண் விளையாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி விளையாடுகிறது.
இதனால் காங்கிரஸிடம் கோட்டை விடும் நிலைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. பாமகவுக்கு 3 தொகுதி கேட்டோம். அவர்கள் தர தயாராக இல்லை. இன்னும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகள் தராவிட்டால் தனித்து போட்டி தான். பாமக தனித்து போட்டியிட்டால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக வெற்றிபெற வாய்ப்பாக அமையும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.