தமிழகம்

கமல் போட்டியிட்டாலும் பாஜக வெற்றி பெறும்: எல்.முருகன் உறுதி

செய்திப்பிரிவு

கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட்டாலும் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் அதிமுக, திமுக இல்லாமல் மூன்றாவது அணியாகத் தேர்தலில் நிற்கிறது. மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், நேற்று இரண்டாம் கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''யார் போட்டியிட்டாலும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நிச்சயம் பாஜக வெல்லும். வேட்பாளர் பட்டியல் குறித்து மாநிலத் தேர்தல் குழு ஆலோசித்து முடிவு செய்து, பரிந்துரைகளைத் தேசியத் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளோம். வேட்பாளர்கள் குறித்து தேசியத் தேர்தல் குழு இறுதி முடிவெடுக்கும். இன்று பட்டியல் வெளியாகும்.

நயினார் நாகேந்திரனின் ஜாதகப்படி நேற்று நல்ல நாள் என்பதால், வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், பி.ஃபார்ம் கொடுத்த பிறகே அவர் அதிகாரபூர்வ பாஜக வேட்பாளர். கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவியின் அனுமதிக்குப் பிறகே அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலை தேசியத் தலைமைதான் அறிவிக்கும்'' என்று எல்.முருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT