மாநிலக் கட்சிகளை மதிக்கிறோம் என்றும் பாஜக பெரியண்ணன் போக்கில் நடப்பதில்லை எனவும் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இரவு கலந்துகொண்ட அவர் பேசும்போது, ''நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். மாநிலக் கட்சிகளை நாங்கள் மதிக்கிறோம். அவை எடுக்கும் முடிவுகளுக்கு உரிய மரியாதையை அளிக்கிறோம். நாங்கள் பெரியண்ணன் போக்கில் நடந்து கொள்வதில்லை. யாரையும் ரிமோட் கன்ட்ரோலில் வைத்திருப்பதில்லை, அதிகாரம் செய்வதில்லை.. அனைத்து விவகாரங்களிலும் அவர்களே முடிவுகளை எடுக்கிறார்கள்.
அதிமுக கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டிலும் மிகுந்த ஜனநாயகத்தன்மையுடனேயே நடந்து கொண்டோம்.
சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது உட்கட்சி விவகாரம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது சசிகலாவின் தனிப்பட்ட முடிவு.
பொதுவாக அதிமுகவினர் எங்களை சில பிரச்சினைகளுக்காக அணுக முயற்சிப்பார்கள். ஆனால் ஒன்றில் நான் தெளிவாக இருக்கிறேன். இது உங்களின் தனிப்பட்ட விவகாரம்; நீங்கள்தான் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து விடுவேன். அதிமுகவை பாஜக கட்டுப்படுத்துவதாக உருவாக்கப்பட்ட பிம்பம் தவறானது
ஒவ்வொரு தேர்தலையும் நாங்கள் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்கிறோம். இந்த முறை தென்னிந்தியாவில் போட்டியிட்டு எங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அசாமில் ஆட்சியைத் தக்கவைப்போம். தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி வெல்லும். புதுச்சேரியிலும் எங்களுக்குத்தான் வெற்றி. கேரளத் தேர்தலிலும் சிறப்பாகப் பணியாற்றுவோம்'' என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ல் இறந்ததை அடுத்து, அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தல்களில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.