அரியலூர் சட்டப்பேரவை தொகுதியில் இரண்டாவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் தாமரை எஸ்.ராஜேந்திரன் இன்று பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அரசு கொறடாவும், மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்த ராஜேந்திரன், அமாவாசை நாளான இன்று (மார்ச் 13) தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
முன்னதாக, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர்,ஜெயலலிதா மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அவர், கட்சியினருடன் அரியலூர் அடுத்த தவுத்தாய்குளம் கிராமத்தில் காளியம்மன் கோயிலில் இன்று காலை வழிபட்ட பின்னர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
கடந்த 5 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்த தாமரை எஸ்.ராஜேந்திரன், அரசு கொறடாவாக பதவி வகித்து வந்தார். "அரியலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி, ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி, அரியலூர் நகரில் பெரம்பலூர் சாலையில் ரயில்வே மேம்பாலம், மருதையாறு, கொள்ளிடத்தில் புதிய உயர் மட்ட பாலங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை மாவட்ட மக்களுக்கு கொண்டு வந்துள்ளேன்.
அதேபோல், மீண்டும் என்னை தேர்ந்தெடுத்தால் மக்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எஸ்எஸ்.சிவசங்கரை விட 2,043 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தற்போது, அரியலூரில் திமுக கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பாவை எதிர்கொள்கிறார். பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பலரும் உடனிருந்தனர்.