தமிழகம்

மார்ச் 15-ம் தேதி மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

வரும் மார்ச் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்து விட்டு அன்று மாலையே பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி கட்சிகளுக்கு ஒதுங்கிய 61 தொகுதிகள் தவிர,திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளேன். இது வேட்பாளர் பட்டியல் மட்டுமல்ல, வெற்றி பெறுபவர்களின் பட்டியல். திமுகபோட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்லாது 234 தொகுதிகளிலும் திமுக போட்டியிடுகிறது, கருணாநிதி தான் வேட்பாளர் என்று நினைத்து திமுகவினர் களப்பணியாற்ற வேண்டும்.

173 தொகுதிகளில் திமுக போட்டியிட்டாலும் மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 1971 தேர்தலில் திமுக 184 தொகுதிகளில் வென்றதுதான் ஒரு கட்சி வென்ற அதிக இடங்கள். அந்த சாதனையை இந்த முறை திமுகவே முறியடிக்கும்.

திமுக வேட்பாளர்கள் அவரவர் வசதிக்கேற்ற நாளில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். வரும் 15-ம் தேதி கொளத்தூர் தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அன்றைய தினம் மாலையே பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT