திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த வீடியோ, புகைப்படக்காரர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். படம்: இரா.கார்த்திகேயன் 
தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.1500 நிர்ணயிக்க வேண்டும்: வீடியோ, புகைப்படக்காரர்கள் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் 8 மணிநேர வேலைக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.1500 நிர்ணயிக்க வேண்டுமென, வீடியோ, புகைப்படக்காரர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட வீடியோ, புகைப் படக்காரர்கள் சங்கம் தலைவர் பாரதிவாசன், செயலாளர் சூரியன் கார்த்திகேயன், பொருளாளர் ராம் இளங்கோ ஆகியோர் தலைமையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய வீடியோ மற்றும் புகைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்க உறுப்பினர்களின் சார்பில் அளி்க்கப்பட்ட மனுவில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழு, பறக்கும் படை, வீடியோ சர்வைலைன்ஸ் ஆகிய குழுக்களில் பணிபுரியும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டதை ரத்து செய்து, மாநிலம் முழுவதும் அரசு பதிவு செய்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.

வீடியோ ஒளிப்பதிவுத் துறையில் அனுபவம் இல்லாத தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஒளிப்பதிவுத் துறையில் மிக அனுபவமிக்க உறுப்பினர்களைக் கொண்ட அரசு பதிவு செய்த சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளுமாறு ஒப்பந்தத்தில் விதிமுறைகளை மாற்றம் செய்து, தேர்தல் ஒளிப்பதிவு பணியை வழங்க வேண்டும். கரோனா காலத்தில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், சில தனியார் நிறுவனங்கள் இடைத்தரகர்களை நியமனம் செய்யும்போது, அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதாகக் கூறி தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஒளிப்பதிவாளர்கள், 8 மணி நேர வேலையை மட்டுமே செய்கிறார்களா என உறுதி செய்யப்பட வேண்டும். 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்சமாக ஊதியம் ரூ.1500 நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT