தமிழகம்

பொதுமக்களை வியக்க வைத்த மாணவர்களின் கண்காட்சி

செய்திப்பிரிவு

கோவை சொக்கம்புதூர் எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 30-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சி பெற்றோர், பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

‘இந்தியாவினுள் நடப்போம்’ என்ற தலைப்பில் நடந்த 2 நாள் கண்காட்சியின் நேற்ற நடந்த தொடக்க விழாவில், பள்ளியில் உள்ள 40 வகுப்பறைகளில் அறிவியல், கணிதம், வரலாற்றுச் சம்பவங்கள், இந்தியத் தலைவர்கள், விடுதலைப் போராட்டம், நதிகள் மற்றும் நீராதாரங்கள், கணினித் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட காட்சியகங்களை அமைத்திருந்தனர்.

இந்திய பழங்கால கட்டிடக்கலை குறித்த அரங்கமாக உருவெடுத்திருந்த வகுப்பறையில் ஜெய்ப்பூர் ஹாவா மஹால், சோமநாதீஸ்வரர் கோயில், தஞ்சை கோயில் உள்ளிட்ட மாதிரிகளை உருவாக்கியிருந்தனர். அதைப் பற்றிய வரலாற்று விளக்கங்களை 6-ம் வகுப்பு மாணவர் விக்கிரஹனுமன் விளக்கினார். இந்த அரங்கில் தஞ்சாவூர் ஓவியம் முதற்கொண்டு உள்ளூர் ஓவியர்களின் ஓவியங்கள் வரை ஆயிரக்கணக்கில் இடம் பெற்றிருந்தன.

இன்னொரு வகுப்பறையில், தற்போது உருவாகும் கட்டிடங்கள் குறித்தும், அதில் புகுத்தப்படும் நவீனகால வசதிகள் குறித்தும் பல மாதிரிகளை உருவாக்கியிருந்தனர். 9-ம் வகுப்பு மாணவர்கள் மாஹின், வர்ஷினி ஆகியோர் இது தொடர்பாக விவரித்தனர்.

மற்றொரு வகுப்பறையில் இந்திய விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தன. ஆதிகாலத்தில் யுத்தக் களம் எப்படியிருந்தது? கேரள பழங்கால கலையான களறி எப்படி உருவானது? என்பதை விளக்கி தற்காலத்தில் குத்துச் சண்டை, கத்திச் சண்டை, குங்ப்பூ, ஜூடோ, கராத்தே என்று மாறியிருப்பதை மாதிரிகள் மூலம் விளக்கினார் 7-ம் வகுப்பு மாணவி சுகவர்ஷா.

இதே அரங்கில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய கத்தி, வாள், குத்தீட்டி, கோடாலி, கதம் ஆகியவற்றை காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஆயிரம் வருடத்துக்கு முந்தைய விபூதிப்பொடி வைக்கும் செம்புப் பெட்டகம், வில்வமரப் பெட்டி, முகஹலாயர்கள் தர்பார் காட்சியை விவரிக்கும் மொஹல் தர்பார், பழங்கால நாணயங்கள், சங்க கால ஓலைச்சுவடிகள், ஆங்கிலேயர் காலத்திய முத்திரைத்தாள்கள், மொஹஞ்சாதாரோ நாகரீகம் என பழங்கால விஷயங்கள் ஓர் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கண்காட்சி குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, ‘இந்த கண்காட்சியில் பல்வேறு ஓவியர்கள், கலைஞர்கள், தொல்பொருள் சேகரிப்பாளர்களிடமிருந்தும் ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்கள் பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, மாணவர்களே வரைந்த ஓவியங்கள், மண்ணாலும், தெர்மோகோலினாலும் செய்த மாதிரிகளும் இடம் பிடித்துள்ளன. இப்படி மாணவர்கள் மூலமே கண்காட்சியை நடத்தும்போது அவர்களுக்கான அறிவு விசால மடைகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற கண்காட்சியை நடத்தினோம். பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது’ என்றனர்.

SCROLL FOR NEXT