முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார். இதனால் அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் மக்கள் நீதி மய்யம், மூன்றாவது அணியாக தேர்தலை சந்திக்கிறது. அக்கட்சியுடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியதால், கோவையில் அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட இரண்டாம் கட்டப் பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.
முதல்முறையாக தேர்தலில் களம்காணும் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானவுடன், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் குழுமியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை தெற்கு தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில், அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இங்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பாஜக சார்பில் தேசிய மகளிரணிச் செயலர் வானதி சீனிவாசன் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், கமல்ஹாசன் போட்டியிடுவதால் கோவை தெற்கு தொகுதி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.