தமிழகம்

விருகம்பாக்கம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு- அண்ணா அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபாகர் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் விருகம்பாக்கம் தொகுதியில் கடந்த 2011, 2016-ல் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரனை சந்தித்து வாழ்த்து பெற கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு பிரபாகர் ராஜா சென்றுள்ளார்.

அப்போது, விருகம்பாக்கத்தில் தனசேகரனுக்கு வாய்ப்பு கிடைக்காத கோபத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜாவின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனசேகரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து விருகம்பாக்கம் திமுக வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். வேட்பாளரை மாற்றாவிட்டால் விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த 80 சதவீத திமுக நிர்வாகிகள் ராஜினாமா செய்வோம் என்று முழக்கமிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தனசேகரன், “கடந்த 2011, 2016 இரு தேர்தல்களிலும் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தேன். அதனால் இந்த முறை கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், கட்சிக்கு புதியவரான பிரபாகர் ராஜாவுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

நாங்கள் ஒருபோதும் திமுகவுக்கு எதிராக, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம். விருகம்பாக்கம் வேட்பாளர் மாற்றப்படுவார் என்று நம்புகிறோம். இல்லையெனில் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வோம்'' என்றார்.

SCROLL FOR NEXT