ஓடும் பேருந்தில் பணத்தை சிதறவிட்டு கவனத்தை திசை திருப்பி பயணிகளிடம் 24 பவுன் நகை திருடிய 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வரதபாளையம், பஜார் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆந்திராவிலிருந்து நகைகளை பாலிஸ் செய்வதற்காக சென்னை செங்குன்றம் வந்தார். பின்னர், மாநகர அரசு பேருந்தில் பிராட்வே வந்தார். அப்போதுதான், பையில் வைத்திருந்த 27 பவுன் நகைகள் காணாமல் போய் இருப்பதை பார்த்தார்.
சிசிடிவி காட்சிகள்
இதுகுறித்து உடனடியாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார்வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நகை திருட்டில் ஈடுபட்டதாக திருப்பத்தூர், ஆதிபான் தெருவைச் சேர்ந்த நந்தினி, அதேபகுதி பகுதியைச் சேர்ந்த தீபா ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 24 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
ஓடும் பேருந்தில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் கூறியது:
நந்தினி, தீபா இருவரும் பேருந்தில் பயணிக்கும்போது, பயணிகளை குறிவைத்து அவர்கள் முன் 10 அல்லது 20 ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு கவனத்தை சிதறடித்து, அந்தப் பயணியின் பணம், நகை பையை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நந்தினி மீது உடுமலைப்பேட்டை, அடையாறு, சிவகாஞ்சி உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் தீபா மீது சிவகாஞ்சி காவல் நிலையத்திலும் திருட்டு வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.