தமிழகம்

கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரம் தேர்தலுக்காக அதிமுக அரசின் மூன்றாம் தர யுக்தி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது தேர்தலுக்காக அதிமுக அரசின் மூன்றாம் தர யுக்தி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரசடிப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:

அரசு கடனை தள்ளுபடி செய்கிறது என்றால் அதற்கான தொகையை ஒதுக்கிவிட்டுத்தான் செய்ய வேண்டும். ஆனால், தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமலே கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் தேர்தலுக்கான மூன்றாம் தர யுக்திதான் என்பது மக்களுக்கு தெரியும்.

தமிழக அரசின் பட்ஜெட் ஆவணங்களை படித்து பார்த்துள்ளேன். நீங்களும் படியுங்கள். அதுகுறித்து மேடையில் கேள்வி கேட்போம்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை முதல்வராக பழனிசாமி பதவியேற்ற உடனே தொடங்கி இருந்தால் மக்கள் வரவேற்று இருப்பார்கள். ஆனால், பதவி முடிவடையும் நிலையில் அடிக்கல் நாட்டுகிறார் என்றால் எப்படி இந்த திட்டம் நிறைவேறும்?.

நிதி மற்றும் பல்வேறு துறை யிடம் முறையான அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. ஆட்சியில் இருந்தவர்கள் 5 ஆண்டுகளில் என்னென்ன செய்தோம் என்று தான் கூற வேண்டுமே தவிர, இனிமேல் என்ன செய்வோம் என்று கூறக்கூடாது என்றார்.

SCROLL FOR NEXT