கோப்புப்படம் 
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் 2 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டி

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக போட்டி யிடுகிறது. அக்கட்சி தொண்டர் கள் களப்பணியாற்ற தொடங்கி விட்டனர். திமுகவில் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி மதிமுகவுக்கும், கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், தென்காசி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் மதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் சதன் திருமலைக்குமார் (69) திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

புளியங்குடியைச் சேர்ந்த சதன் திருமலைக்குமார் மதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உள்ளார்.

இவரது மனைவி டாக்டர் குளோரி சந்திரகாந்தம். டாக்டர் விஜய ரோகிணி, டாக்டர் ஜெயந்தி பிரியதர்ஷினி ஆகிய மகள்கள் உள்ளனர். 2 முறை மக்களவைத் தேர்தல், 5 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ள இவர், கடந்த 2006-ல் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

கடையநல்லூர் தொகுதி திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப் பட்டு, வேட்பாளராக ஏற்கெனவே கடந்த முறை இத் தொகுதியில் வெற்றிபெற்ற முஹம்மது அபூபக்கர் (50) மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பி.எஸ்சி படித்துள்ளார். மனைவி செய்யது பாத்திமா. மகன் அஹ்மது முஹ்யத்தீன்.

சங்கரன்கோவில் (தனி), ஆலங் குளம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிடுகிறது.

ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் ஆவார். ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் 2 முறை வெற்றிபெற்றுள்ள இவர், கடந்த 2006-ம் ஆண்டில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

சங்கரன்கோவில் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ஈ.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். தென்காசியை அடுத்த சிந்தாமணியைச் சேர்ந்த இவர், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். பி.காம். எம்.ஏ.,பி.எல். படித்துள்ளார். மனைவி பெயர் அனுசியா. இஷானிகா, மேக்னா என்ற மகள்களும், ஈஸ்வர் என்ற மகனும் உள்ளனர்.

SCROLL FOR NEXT