வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான முதல் நாளான இன்று விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனுத்தாகல் செய்தார். 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி கடந்த மாதம் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்காக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் தொகுதிக்கான வேட்புமனுக்கள் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கான வேட்புமனுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், சாத்தூர் தொகுதிக்கான வேட்புமனுக்கள் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வழங்கலாம்.
இதேபோன்று, சிவகாசி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் சிவகாசி சார்- ஆட்சியர் அலுவலகத்திலும், அருப்புக்கோட்டை தொகுதிக்கான வேட்பு மனுக்கள் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், விருதுநகர் தொகுதிக்கான வேட்புமனுக்கள் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருச்சுழி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும் வழங்கலாம்.
ஆனால், வேட்புமனுத் தாக்கல் செய்ய முதல்நாளான இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய பிரதான கட்சி வேட்பாளர்கள் யாரும் வரவில்லை.
அதோடு, திருச்சுழி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கழுவனஞ்சேரியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் வெள்ளைச்சாமி என்பவர் மட்டும் மாவட்டத்தில் முதல்ஆளாக மற்றும் ஒரே ஆளாக இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வராததால் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களும், சிவகாசி சார்-ஆட்சியர் அலுவலகமும், சாத்தூர், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகங்களும் இன்று வெறிச்சோடிக் கிடந்தன.