கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு நடைபெற்ற குன்னூர் வேட்பாளர் அறிமுக நிகழ்வில், குன்னூர் எம்எல்ஏ சாந்தி அ.ராமு, அதிமுக மாநில விவசாயப் பிரிவுத் துணை தலைவர் எம்.பாரதியாரைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி டி.வினோத் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று சென்னையிலிருந்து திரும்பினார். கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு வினோத்துக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
அப்பகுதியில் குன்னூர் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நடத்தப்பட்டது. அங்கு குன்னூர் எம்எல்ஏ சாந்தி அ.ராமு மற்றும் அதிமுக மாநில விவசாயப் பிரிவுத் துணை தலைவர் எம்.பாரதியார், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் கே.ஆர்.அர்ஜூணன், பால நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், சிலைக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த படிகளில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, குன்னூர் எம்எல்ஏ சாந்தி அ.ராமு, அதிமுக மாநில விவசாய பிரிவுத் துணை தலைவர் எம்.பாரதியார் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால், தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட விரக்தி மற்றும் பாரதியாருடன் ஏற்கனவே கரோனா காலத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு ஆகியவற்றால், எம்எல்ஏ ராமு கடுமையாக வாக்குவாத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் உச்சம் அடைந்து, பாரதியாரை ராமு தாக்கினார். உடனே சுதாரித்துக்கொண்ட அதிமுக நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில், கீழே நின்றிருந்த ராமுவின் ஆதரவாளர்கள் பாரதியாரை உடனடியாக கீழே இறங்கக் கூறி, கூச்சலிட்டனர். மேலும், பாரதியாரைத் தாக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.