தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக,அதிமுக.சார்பில் உடன்பிறந்த சகோதரர்கள் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர். இரண்டாவது முறையாக இவர்கள் எதிரெதிர் அணியில் களம் இறங்குகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் வெற்றி பெற்ற தொகுதி ஆகும்.
1977 முதல் 2019வரை நடைபெற்ற 12 தேர்தலில் 9 முறை அதிமுகவே வென்றுள்ளது. இதனால் அதிமுகவின் நம்பிக்கைக்கு உரிய தொகுதியாக ஆண்டிபட்டி மாறியது.
இந்நிலையில், கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்கதமிழ்ச்செல்வன் அமமுகவிற்கு மாறினார். இதனால் 2019-ம் ஆண்டு இங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக.சார்பில் மகாராஜனும், அதிமுக. சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர். இருவரும் உடன்பிறந்த சகோதாரர்கள் ஆவர். இதனால் இத்தொகுதி மாநில அளவிலான கவனத்தைப் பெற்றது.
இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன் தனது தம்பி லோகிராஜனைவிட 12ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து இருவரும் இத்தொகுதியில் காலூன்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சட்டப்பேரவை உறுப்பினர் மகாராஜன் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள், கரோனா காலத்தில் நலத்திட்ட உதவி போன்றவற்றை செய்து வந்தார். மகாராஜன் ஆண்டிபட்டி ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பதால் அதன் மூலம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இருவருமே இத்தேர்தலில் போட்டியிட தத்தம் கட்சியில் விருப்பமனு அளித்திருந்தனர். இருப்பினும் இந்த முறை சகோதாரர்களுக்கு கட்சி தலைமை வாய்ப்பு அளிக்குமா என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக.வேட்பாளராக லோகிராஜனும், இன்று வெளியான திமுக.பட்டியலில் மகாராஜனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்..
இதன் மூலம் அண்ணன், தம்பி வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் எதிரெதிரே இரண்டாம் முறையாக போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியானதில் இருந்தே இருவரும் தேர்தல் பணியில் மும்முரம் காட்டத் தொடங்கி உள்ளனர்.