அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் யுவராஜா ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 6 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ளார். இதில் இளைஞரணிச் செயலாளர் யுவராஜாவுக்கு இடம் கிடைத்துள்ளது. அவர் ஈரோடு (கிழக்கு) தொகுதியில் போட்டியிடுகிறார்.
எந்தெந்த வேட்பாளருக்கு என்னென்ன தொகுதிகள்?
1. திரு.வி.க. நகர் (தனி) (15) – கல்யாணி
2. ஈரோடு (கிழக்கு) (98) - யுவராஜா
3. லால்குடி (143) - தர்மராஜ்
4. பட்டுக்கோட்டை (176) - ரங்கராஜன்
5. தூத்துக்குடி (214) - விஜயசீலன்
6. கிள்ளியூர் (234) - ஜூட் தேவ்
ஆகியோர் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
தமாகாவின் பயணம்..
2016- சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை அடைந்தபின் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறினார் வாசன். காங்கிரஸ், தமாகா ஒரே கூட்டணியில் இருக்க முடியாத காரணத்தால் அதிமுகவுக்கு நெருக்கமானார்.
கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவுக்கு நல்ல நண்பனாக சில நேரம் இடிந்துரைத்தாலும் பல நேரம் அதிமுக அரசுக்கு பக்கபலமாக இருந்தார். இதனால், அதிமுகவில் மாநிலங்களவை சீட் வாசனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் எளிதாக இடங்களை கேட்டுப்பெறலாம் என்று ஜி.கே.வாசன் நினைத்திருந்த நிலையில் அவர் கட்சி கேட்ட 12 தொகுதிகளை வழங்க அதிமுக மறுத்தது. தற்போது 6 சீட்டுகளை தமாகா ஏற்றுக்கொண்டு, வேட்பாளர்களை அறிவித்துள்ளது.