திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் 9 பேர் மருத்துவர்களாவர்.
திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது.
நேற்று (மார்ச் 11) மாலை மதிமுகவும், இரவு விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து, இன்று (மார்ச் 12) காலை 10.30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியானது. பின்னர் நேரம் மாற்றப்பட்டது.
திமுக பட்டியலை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் படம் முன் பட்டியலை வைத்து ஆசி பெற்றார். பின்னர் அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் வைத்து வணங்கினார். பின்னர், அறிவாலயம் வந்த அவர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, 173 தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் 9 பேர் மருத்துவர்களாவர். புதுக்கோட்டையில் முத்துராஜா, ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா, பொள்ளாச்சி தொகுதியில் வரதராஜன், ராசிபுரம் (தனி) தொகுதியில் மதிவேந்தன், வீரபாண்டி தொகுதியில் ஆ.கா.தருண், விழுப்புரம் தொகுதியில் ஆர்.லட்சுமணன், மைலம் தொகுதியில் இரா.மாசிலாமணி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் எம்.பிரபு ராஜசேகர், ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன் ஆகியோர் மருத்துவர்கள் ஆவர்.