தமிழகம்

புதுச்சேரியில் சீட் கிடைக்காததால் அதிருப்தி; காங்கிரஸுக்கு தாவிய என்ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ

செ. ஞானபிரகாஷ்

காங்கிரஸிலிருந்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸுக்கு தாவி வந்த முக்கிய பிரமுகர்கள், தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸுக்கு தாவ தொடங்கியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே புதுவையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்புக்கு ஆரம்பமாக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவி விலகி பாஜகவில் இணைந்தனர். இதனையடுத்து ஜான்குமார் பதவி விலகி பாஜகவில் இணைந்தார். கட்சியின் நிர்வாகிகள் பலர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

இதனால் காங்கிரஸ் நிலைகுலையும் அளவுக்கு சென்றது. இந்நிலையில் திடீர் திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏ லட்சுமிநாராயணன் பதவி விலகி என்ஆர்.காங்கிரசில் இணைந்தனர். இவர்கள் பதவி விலகலே ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. இதில் எந்த தொகுதி யாருக்கு செல்கிறது என வேட்பாளர் பிரதிநிதிகள் கண்காணித்து வந்தனர். இன்று காங்கிரஸ் பக்கம் தாவும் படலம் தொடங்கியது. முன்னாள் என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் அலுவலகத்தில் வந்து காங்கிரசில் இணைந்தார்.

வருகிற தேர்தலில் என்ஆர் காங்., சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட வைத்தியநாதனுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், என்ஆர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்து இன்று காங்கிரஸில் இணைந்தார். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களோடு அவர் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்தது பற்றி வைத்தியநாதன் கூறுகையில், "அரசியல் வியாபாரிகளிடமிருந்து லாஸ்பேட்டை தொகுதியையும், மக்களையும் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் இணைந்துள்ளேன். புதுவையில் மதச்சார்பில்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

இவரைத்தொடர்ந்து மேலும் பலரும் காங்கிரஸில் இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் புதுச்சேரியில் கூட்டணி வலுவால் வெற்றி உறுதி இதைத்தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதால், வெற்றி உறுதியாகி விட்டது. புதுச்சேரியிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிர்வாகிகள் கருத்தை, கட்சி மேலிடத்தில் தெரிவிப்போம்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT