தமிழகம்

'மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன்; ஆதரவு தாருங்கள்'- உதயநிதி மகிழ்ச்சி ட்வீட்

செய்திப்பிரிவு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன்; ஆதரவு தாருங்கள் என்று திமுக சார்பில் அத்தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். ஸ்டாலின் கொளத்தூரிலும், முதன் முறையாக உதயநிதி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

முன்னதாகத் திமுக கூட்டணியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதால் போட்டியிட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் நேர்காணலில் உதயநிதி மட்டுமே பங்கேற்றார்.

நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் வேறு யாரையாவது பரிந்துரைக்கலாம் என்பதால் அவர் போட்டியிட மாட்டார். மஸ்தான், ஜின்னா அல்லது மதன் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, ''2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிற வாய்ப்பை வழங்கிய ஸ்டாலினுக்கும் கட்சி தலைமைக்கும் நன்றி. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன். ஆதரவு தாருங்கள். அன்பும் நன்றியும்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT