காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தொகுதி ஒதுக்காததால் சிபிஎம் விலகி ஐந்து தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்கான அறிவிப்பு மாலை வெளியாகிறது.
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இச்சூழலில் காங்கிரஸுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம் கூட மதசார்பற்ற அணியில் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் கூடி அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து வருகின்றனர். இதுதொடர்பாக கட்சி முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், "மதசார்பற்ற அணியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சிபிஎம் இடம் பெற்றிருந்தது.
ஆளுநர் கிரண்பேடி எதிரான போராட்டம் தொடங்கி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் வரை அனைத்திலும் சிபிஎம் பங்கேற்று போராடியது. வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தெரிவித்திருந்தோம். புதுச்சேரியில் சிபிஎம் கட்சிக்கு ஓரிடம் கூட ஒதுக்கவில்லை.
தவறான முடிவை எடுத்துள்ளதால் நாங்கள் தனித்து ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம். அத்துடன் மாஹேயில் சுயேட்சை வேட்பாளருக்கும் ஆதரவு தருகிறோம். கூட்டம் முடிந்து இதற்கான அறிவிப்பை இன்றுக்குள் அறிவிப்போம்" என்று குறிப்பிட்டனர்.
குறைந்த தொகுதிகள் பெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைமை மீது நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து திமுக கூட்டணி வேண்டாம் என்று கோரி வருகின்றனர். இச்சூழலில் இக்கூட்டணியில் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த சிபிஎம் வெளியேறுவதால் பிளவு ஏற்பட்டுள்ளது.