திமுக கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூடி விவாதித்த கட்சி நிர்வாகிகள் | படம்: சாம்ராஜ் 
தமிழகம்

திமுக கூட்டணிக்கு எதிர்ப்பு; தனித்து போட்டியிட வேண்டும் : புதுச்சேரியில் காங். நிர்வாகிகள் திடீர் தீர்மானம்

செ. ஞானபிரகாஷ்

திமுகவுடன் கூட்டணி வேண்டாம், தனித்து போட்டியிடலாம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று கூடி காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் சென்னை சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு இரு இடங்களும் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் புதுச்சேரி திரும்பினர்.

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், வட்டாரத் தலைவர்கள், மாவட்டத்தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்று கூடி இன்று ஆலோசித்தனர். அதில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இக்கூட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் தரப்பில் கேட்டதற்கு, "புதுச்சேரியில் ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. கடந்த தேர்தலில் 15 இடங்களில் வென்றிருந்தோம். கூட்டணிக்கட்சி திமுக முதலில் இரு இடங்களை மட்டுமே வென்றிருந்தது.

தற்போது காங்கிரஸுக்கு குறைவாகவும், திமுகவுக்கு அதிகமாகவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் திமுகவுடன் கூட்டணி வேண்டாம். தனித்து காங்கிரஸ் போட்டியிடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" என்று குறிப்பிட்டனர். இதைத்தொடர்ந்து பல நிர்வாகிகளும் தீர்மான நகலில் கையெழுத்திட்டனர்.

தீர்மானத்தை காங்கிரஸ் கட்சித்தலைவர், முன்னாள் முதல்வர், எம்பி ஆகியோரிடம் தர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT