முதல்வர் பழனிசாமி - சம்பத் குமார்: கோப்புப்படம் 
தமிழகம்

எடப்பாடியில் திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் சம்பத் குமார்; யார் இவர்?

செய்திப்பிரிவு

எடப்பாடி தொகுதியில், அதிமுக சார்பாக போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் போட்டியிடுகிறார்.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்த நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது.

நேற்று மாலை மதிமுகவும், இரவு விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து இன்று காலை 10-30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியானது. பின்னர் நேரம் மாற்றப்பட்டது.

திமுக பட்டியலை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் படம் முன் பட்டியலை வைத்து ஆசி பெற்றார்.பின்னர் அண்ணா சமாதி, கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார். பின்னர் அறிவாலயம் வந்த அவர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் எடப்பாடி தொகுதியில், அதிமுக சார்பாக போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தார். இம்முறை இத்தொகுதியில் மூன்றாவதாக களம்காண்கிறார்.

திமுக சார்பில் போட்டியிடும் 37 வயதான சம்பத்குமார், தமிழரசன் - புஷ்பா தம்பதியரின் மகனாவார். எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். 2003-ம் ஆண்டில் திமுகவில் இணைந்த சம்பத்குமார், 2015-ம் ஆண்டு முதல் சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். கொங்கனாபுரம் பேரூர் இளைஞரணி முன்னாள் செயலாளராகவும் இருந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. விவசாயம் செய்துவருகிறார். இவர் திமுக சார்பாக முதல்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT