திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் 10-வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுகவில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களைத் தவிர்த்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.
இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் காட்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராமுவை எதிர்த்து திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் 10-வது முறையாகப் போட்டியிடுகிறார்.
திமுக மூத்த தலைவரான துரைமுருகன் சட்டப்பேரவைத் தேர்தலில் 11 முறை களம் கண்டவர். ஏற்கெனவே 9 முறை காட்பாடி தொகுதியிலும் 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் துரைமுருகன் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில், 10-வது முறையாக காட்பாடி தொகுதியில் துரைமுருகன் களம் காண்பது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.