இது வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் அல்ல, வெற்றி பெறுபவர்கள் பட்டியல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பாக 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 12) வெளியிட்டார்.
முன்னதாக, அவர் பேசுகையில், "திமுக வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அரசியல் கூட்டணி அல்ல. தேர்தல் கால கூட்டணியும் அல்ல. இதுவொரு கொள்கை கூட்டணி. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 61 தொகுதிகளில் தோழமை கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-25, மதிமுக - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6 , விசிக - 6, முஸ்லிம் லீக் - 3, கொங்குநாடு மக்கள் கட்சி - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, தமிழக வாழ்வுரிமை கட்சி - 1, ஃபார்வர்ட் பிளாக் - 1, ஆதிதமிழர் பேரவை - 1, மக்கள் விடுதலை கட்சி - 1 தொகுதி என 61 தொகுதிகளில் தோழமை கட்சிகள் போட்டியிடுகின்றன. தோழமை கட்சிகள் 14 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. எனவே, 187 தொகுதிகளில் உதயசூரியன் களம்காண்கிறது. பாழ்பட்டு நிற்கும் தமிழகத்துக்கு வழிகாட்ட திமுக முழுமையாக களம் காண்கிறது. இது வேட்பாளர் பட்டியல் மட்டும் அல்ல, வெற்றி பெறுபவர் பட்டியலும்கூட" என தெரிவித்தார்.
பின்னர், அவர் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வரிசையாக வாசித்தார்.