தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்றுக்குள் முடிவு கிடைக்கும் எனவும், அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.
அமமுக கூட்டணியில், ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சி 3 தொகுதிகளிலும், கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும், எஸ்டிபிஐ 6 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இதனிடையே, நேற்று (மார்ச் 11) வெளியான அமமுக இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலின்படி, டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனிடையே, சென்னையில் இன்று (மார்ச் 12) தினகரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை எந்த அளவில் உள்ளது?
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றுக்குள் முடிவு கிடைக்கும் என நினைக்கிறேன். தொகுதிப் பங்கீடு முடிந்துவிடும் என நம்புகிறோம்.
கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்துப் போட்டியிடுகிறீர்களே?
நான் கோவில்பட்டியில் போட்டியிருகிறேன். எல்லோரும் மக்களையும் தொண்டர்களையும் நம்பித்தான் போட்டியிடுவார்கள். மாபெரும் வெற்றியை கோவில்பட்டி தொகுதி மக்கள் தருவார்கள் என நம்புகிறேன். நிச்சயம் நான் வெற்றிபெறுவேன்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறீர்களா?
இன்று தெரிந்துவிடும்.
இவ்வாறு தினகரன் பதிலளித்தார்.