சென்னையில் திமுக தோழமைக்கட்சிகள் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை, இதனால் திமுக சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி திமுக தோழமைக்கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தின. இதில் பெரும்பாலான கட்சிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை, அல்லது அவர்கள் கேட்ட தொகுதியை ஒதுக்க திமுக முன் வரவில்லை.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸும் மதுரவாயல் தொகுதியை கேட்டதாக தெரிகிறது, அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் பெரம்பூர் தொகுதியை கேட்டு உறுதியாக நின்றது.
ஆனால் திமுக விட்டுத்தர முன் வரவில்லை. ஆர்.கே.நகர் அல்லது திருவொற்றியூரை ஒதுக்குவதாக திமுக சொன்னதை மார்க்சிஸ்டுகள் ஏற்கவில்லை. இதனால் சென்னையில் மார்க்சிஸ்ட் போட்டியிடவில்லை.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட மதுரவாயல் தொகுதியை காங்கிரஸுக்கு திமுக வழங்காமல் வேளச்சேரி தொகுதியை வழங்கியது. இது திமுகவின் சிட்டிங் தொகுதியாகும். அங்கு தற்போது காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் கூட்டணிக்கட்சிகள் சென்னை நகரில் போட்டியிட விரும்பாததால் சென்னையில் 15 இடங்களில் திமுக வேட்பாளர்கள் களத்தில் குதிக்கின்றனர்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேளச்சேரி தவிர அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் திமுகவில் வேட்பாளராக இவர்களுக்கு போட்டியிட வாய்ப்புள்ளது என திமுக வட்டாரத்தில் வெளியாகும் தகவல் வருமாறு:
1. பெரம்பூர் - ஆர்.டி.சேகர்- - அல்லது அனிதா அகாடமி நரேந்திரன்
2. தி.நகர் - ராஜா அன்பழகன்,
3. ஆர்.கே.நகர்- சிம்லா முத்துச் சோழன்,
4. எழும்பூர் - வழக்கறிஞர் பரந்தாமன் அல்லது பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி,
5. திரு.வி.க நகர் - தாயகம் கவி- தமிழ்வேந்தன்
6. விருகம்பாக்கம் - பிராபகர் ராஜா அல்லது தனசேகர்
7. அண்ணாநகர்- எம்.கே.மோகன் அல்லது கார்த்திக்,
8. ராயபுரம் - இளைய அருணா,
9. வில்லிவாக்கம் - ரங்கநாதன் அல்லது வெற்றியழகன் (பேராசிரியர் பேரன்)
10. கொளத்தூர்- ஸ்டாலின்
11. சேப்பாக்கம் - உதயநிதி அல்லது ஜின்னா
12. ஆயிரம்விளக்கு- எழிலன்
13. மயிலாப்பூர்- த.வேலு
14. துறைமுகம் - சேகர் பாபு
15. சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்
மேற்கண்டவர்கள் போட்டியிடவே அதிக வாய்ப்பு எனும் நிலையில் இது திமுக வட்டாரத்தில் வெளியான உத்தேச தகவல் மட்டுமே முழுமையான உறுதியான தகவல் அல்ல. இன்று 12 மணிக்கு மேல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.