பொன்னேரி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி திமுக நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

பொன்னேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்குவதா?- அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கூடாது என்று வலியுறுத்தி திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று காலை 11.30 மணியளவில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் தலைமையில் 50-க்கும் அதிகமானோர் அண்ணா அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரியை காங்கிரஸுக்கு ஒதுக்கினால் தோல்வி உறுதி. எனவே, திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சிக்கான தொகுதிகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். இதனால், அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை திமுக தலைமை நிலைய நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பொன்னேரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 2016-ல் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பரிமளம், முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் மகன் தமிழ்உதயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையசூரியன், மாவட்ட துணைச் செயலாளர் கதிரவன் உள்ளிட்ட பலரும் வாய்ப்பு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி மணப்பாறை பேருந்து நிலையம் அருகே நேற்று திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக கூட்டணியில் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தொண்டரான பொய்யாதநல்லூரைச் சேர்ந்த செ.செல்லக்கண்ணு(28) அரியலூர் அண்ணா சிலை அருகே மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீஸார் அவர் மீது தண்ணீரை ஊற்றி, சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல், திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி அறந்தாங்கி கட்டுமாவடி முக்கத்தில் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்த வீரா(40) அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், அவர் போலீஸார் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

SCROLL FOR NEXT