தனக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய திமுகஎம்பி ஆர்.எஸ்.பாரதி, பட்டியலினத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக அவருக்கு எதிராக ஆதிதமிழர் மக்கள் கட்சி சார்பில் தேனாம்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை கோரியும் சென்னைஉயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரமும், அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனும், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக புகார் அளித்த புகார்தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரியும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதிஷ்குமார், கடந்த பிப்ரவரி இறுதியில்,ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தமனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில்,‘‘ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகிறதா, இல்லையா என்பதை ஆதாரங்களுடன் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றம்தான். தற்போதுள்ள சூழலில் ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் தாமதமின்றி விசாரிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தியிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ மனுதாரர் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதுபோன்ற எண்ணமும் அவருக்குஇல்லை. மனுதாரருக்கு எதிராகஅரசியல் உள்நோக்கத்துடன் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவழக்கும் பதிவு செய்யப்பட்டுள் ளது. இதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என அதில் கோரியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திரபட் அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.