விழாவில், சமூக இடைவெளியுடன் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பகுதியினர். 
தமிழகம்

நாட்டுப்புற இசை, கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா

செய்திப்பிரிவு

கோவை வெள்ளியங்கரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை, லிங்க பைரவி தேவி ஊர்வலத்துடன் தொடங்கியது. தியானலிங்கத்தில் பஞ்சபூத க்ரியா நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர், விழா மேடையில் லிங்க பைரவி தேவிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து, மகா யோக வேள்வியை சத்குரு ஏற்றிவைத்தார்.

விழாவில் சத்குரு பேசும்போது, “மகா சிவராத்திரி விழாவை, குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்த விழாவாகப் பார்க்கக் கூடாது. கோள்களின் நிலைகளில் இன்று ஏற்படும் மாற்றம் காரணமாக, மனிதர்களின் உயிர் சக்தியானது இயற்கையாகவே மேல்நோக்கி நகரும். எனவே, இரவு முழுவதும் முதுகுத் தண்டை நேராக வைத்துக் கொண்டு, விழிப்புடன் இருந்தால் அளப்பரிய பலன்களைப் பெற முடியும். ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு மட்டுமின்றி, ஒருவரது முக்திக்கும் இந்நாள் மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள்

விழாவில், இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, பிரபல தமிழ் நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசனின் பாடல்களுடன், பறை இசைக் குழுவினரின் பறையாட்டம் அரங்கை அதிரவைத்தது. இதேபோல, தெலுங்குப் பாடகி மங்களியின் பாடல்கள், ராஜஸ்தானிய கலைஞர் குட்லே கானின் கிராமியப் பாடல்கள், சந்தீப் நாராயணின் கர்னாடக சங்கீதம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. மேலும், பாலிவுட்டில் பிரபலமான கபீர் கஃபே குழுவினர், பின்னணிப் பாடகர் பார்த்திவ் கோஹில் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், சவுண்ட் ஆஃப் ஈஷா குழுவினரின் பாடல்கள், சம்ஸ்கிரிதி மாணவர்களின் நடனம், கண்ணைக் கவரும் ஆதியோகி திவ்ய தரிசனம் ஆகியவையும் பக்தர்களைக் கவர்ந்தன.

‘கரோனா’ தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த, குறைவான எண்ணிக்கையிலான பக்தர்களே ‘கரோனா’ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்த பின்னர்விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT