வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், தொடர்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி, `அனைவரும் வாக்களிப் போம். அனைவரும் முகக்கவசம் அணிவோம்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட ராட்சத எரிவாயு பலூனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கு.ராசாமணி நேற்று பறக்கவிட்டார்.
தொடர்ந்து, ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வரும் வாரம் முதல்கட்ட பயிற்சியும், 26-ம் தேதி இரண்டாம் கட்டப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிக ளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கத் தேவையான, அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. 80 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கவும், 120 பறக்கும்படைக் குழுவினர் விரைவில் கண்காணிப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் முழுமையாக தெரிவிக்குமாறு, வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது" என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.