இந்தியாவில் சமையல் காஸ் பயன்பாடு 23.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத, மலிவான எரிசக்தியான எல்பிஜி சிலிண்டர்கள் பலரின் சமையலறை தோழனாக விளங்குகிறது. ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் சமையல் எரிவாயுவை பயன்படுத்தச் செய்யும் பிரதமரின் திட்டப்படி, பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா (பிஎம்யுஒய்) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தற்போது சமையல் காஸ் பயன்பாடு அதிகரித்துள்ளது. பிஎம்யுஒய் பயனாளிகளுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்குவதால், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் காஸ் பயன்பாடு 23.2 சதவீதம் அதிகரித்துள்ளது. டிச. 2020 முதல் பிப். 2021 வரையிலான 3 மாதங்களில் சமையல் எரிவாயு பயனாளிகளின் காஸ் பயன்பாடு 7.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிஎம்யுஒய் பயனாளிகளின் காஸ் பயன்பாடு 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,45,310 மெட்ரிக் டன்னாக இருந்த பயன்பாடு தற்போது 10,10,054 டன்னாக வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு பயன்பாடு ஒட்டுமொத்தமாக 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
2014-ம் ஆண்டில் எல்பிஜி பயன்பாடு 55 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 99 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது விறகு கட்டைகளுக்கு மாற்றாக எல்பிஜியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை தெரிவிக்கிறது. தற்போதும் விறகைவிட எல்பிஜி காஸ் விலை குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.