ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்த டி.டி.வி. தினகரன் திடீரென கோவில்பட்டியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த மாதம் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். இதற்காக நிர்வாகிகள் ஆண்டி பட்டியில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த போது இந்த மாவட்டத்துக்கு பலமுறை வந்ததால், தொகுதி மக்களிடையே அவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது. ஆன்மிகம் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இத்தொகுதியில் செய்திருந்தார். இதனால் ஆண்டிபட்டி தொகுதி இவரின் முதன்மைத் தேர்வாக இருந்தது.
இத்தொகுதியில் போட்டியி டலாமா என்று நடத்திய சர்வேயில் இவருக்கு சாதகமில்லாத நிலை இருப்பது தெரிந்தது. தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனால் தேர்தல் நேரத்தில் எதிர் அணியினரின் பல உள்ளடி வேலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் அமமுக கட்சியினரிடையே ஒருமித்த செயல்பாடுகளும் இல்லை. எனவே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் அவர் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.