கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட உள்ள நிலையில், 3 சட்டப்பேரவை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருப்பதால் குமரி மாவட்ட பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால், குமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக ராகுல்காந்தி, அமித்ஷா, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர், வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டிச் சென்றுள்ளனர். அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரவுள்ளனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக இத்தொகுதியில், ஏற்கெனவே 8 முறை களம் கண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகபோட்டியிடுவதால், குமரி சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது சந்தேகம் என்ற தகவல் பரவியது. இதனால், பாஜகநிர்வாகிகள் அதிர்ச்சியில் இருந்தனர்.
குமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகம் இருப்பதால் 3 தொகுதிகளாவது ஒதுக்கவேண்டும் என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகனிடமும், தேசியத் தலைமையிடமும் குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பாஜகவுக்கு நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்குபோட்டியிடும் வேட்பாளர்கள்விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக,குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியபோதும், கணிசமான வாக்குகளைப் பெற்றது. தற்போது அதிமுக கூட்டணியுடன் பாஜக தேர்தலை சந்திப்பதால், தேர்தல்பணிகளை பாஜகவினர் உற்சாசகமாக தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இத்தொகுதி எம்பியான மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தை களம் இறக்க கட்சி தலைமை திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸார் கூறிவருகின்றனர். இது உறுதியாகும் பட்சத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தாமரை மலருமா அல்லது ‘கை’ வலுப்பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.