தமிழகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மகா சிவராத்திரி விழா: சிவன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று விடிய விடிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில், தஞ்சபுரீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர் கோயில், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், ஆதிகும்பேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உட்பட அனைத்து சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு ஜாம அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பாபநாசத்தில் உள்ள ராமலிங்க சுவாமி கோயிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. இவற்றை ஒரே நேரத்தில் வழிபடும்போது 108 சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை சிறப்பு பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து, 108 சிவலிங்கங்களுக்கும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. நேற்று மாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விடிய விடிய சிவனை வழிபட்டனர்.

SCROLL FOR NEXT