வேலூர் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழாவில் சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற மயானக்கொள்ளை திருவிழா நாளை (13-ம் தேதி) நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மயானக் கொள்ளை விழாவுக்கான தேர் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது, தீப்பிடிக்கக் கூடிய வகையில் உள்ள பொருட்களையும் தேரில் பயன்படுத்தக்கூடாது. கூம்பு வடிவ ஒலிப் பெருக்கியை பயன்படுத்தக் கூடாது.
விழாக் குழுவினர் சட்டத்துக்கு புறம்பாக மின் திருட்டில் ஈடுபடக் கூடாது. ஊரடங்கு அமலில் இருப்பதால் கச்சேரி நடத்த தடை விதிக்கப்படுகிறது. மயானக் கொள்ளை விழாவை இரவு 7 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். சுவாமி சிலைகளை நான்கு சக்கர வாகனங்கள் அல்லது மினி லாரி, டிராக்டர்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகளில் சிலைகளை எடுத்துச்செல்ல அனுமதியில்லை. வாகனத்தில் ஏறிச் செல்பவர்கள் மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள எண்ணிக்கையில் மட்டுமே இருக்க வேண்டும். திருவிழா நடைபெறும் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப் பட்டிருக்கும்.
திருவிழா நடைபெறும் இடங் களில் பட்டாசு மற்றும் வெடி பொருட்கள் வெடித்தல் கூடாது. விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந் திருக்க வேண்டும். சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படும் நபர்கள் மீது காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கை எடுப்பார்கள்’’ என தெரிவித்துள்ளார்.