அமைச்சர்களின் பொறாமையால் எம்எல்ஏ சீட் மறுக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அதிமுக நிர்வாகியும் எம்எல்ஏவுமான் தோப்பு வெங்கடாசலம் பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று சென்னையில் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அளித்த பேட்டி:
''கடந்த 10 ஆண்டுகளாக பெருந்துறை தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கினார். வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். மாவட்டக் கழகச் செயலாளராகவும் இருந்திருக்கிறேன். 2016 தேர்தலில் 8 தொகுதிகளுக்குத் தேர்தல் பொறுப்பாளராக இருந்தேன். அப்போது ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை நாங்களே பெருந்துறையில் நடத்தினோம்.
ஜெயலலிதா மறைந்த பிறகும் முதல்வர், துணை முதல்வருக்குக் கட்டுப்பட்டு 4 ஆண்டுகாலமாகப் பணியாற்றி வருகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோட்டில் அதிமுகவுக்கு அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.
தொகுதிக்காகப் போராடும்போது சில மனச்சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறேன். அதற்காக 2021 தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது என்னைவிட என் தொகுதி மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. உளவுத்துறை அறிக்கையில், என்னுடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீட் வழங்கப்படவில்லை.
அதனால் கட்சியின்மீது சேற்றை வாரி இறைக்கத் தயாராகவில்லை. ஆனால் எந்த அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றது என்பது தெரியவில்லை. டிடிவி ஆதரவோடு இருந்ததால்தான் இடம் கிடைக்கவில்லை என்ற கருத்து தவறானது. என் மாவட்ட அமைச்சர்கள் என்னைப் பற்றித் தவறான தகவல்களைக் கொடுத்திருந்தால் அது மக்களுக்கு எதிரான முடிவு. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் என்னைப் பார்க்கக் கூடாது. மக்களுக்கு ஆற்றிய பணிகளைத்தான் பார்க்க வேஎண்டும்.
அமைச்சர்கள் மனதில் போட்டி, பொறாமை மனதளவிலேதான் இருக்க வேண்டும். எந்த அமைச்சராவது நல்ல மக்கள் பிரதிநிதியைத் தடுப்பது தவறானது. எனக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்? தொண்டர்களின் உண்மையான உணர்வைத் தலைமை பரிசீலிக்க வேண்டும். அதிமுகவில்தான் நான் நீடிக்கிறேன்''.
இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.