புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் புதிய கூட்டணி அமைகிறது. நாளை முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இது குறித்து, மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலச்செயலாளர் சந்திரமோகன் இன்று (மார்ச் 11) கூறியதாவது:
"புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சுசி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்று புதிய கூட்டணி அமைத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் நாளை வெளியிடப்படுகிறது. ஒரு நாள் கழித்து இரண்டாவது பட்டியல் வெளியாகும். மக்கள் நீதி மய்யத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவையும் கோரியுள்ளோம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி போட்டியில்லை
ஆம் ஆத்மி கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடவில்லை என்று கட்சியின் மாநிலத் தலைவர் ரவி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி, அவரிடம் கேட்டதற்கு, "கட்சி மேலிடம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதைத்தொடர்ந்து, வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம். தற்போது வரும் தேர்தலில் எக்கட்சிக்கு ஆதரவு என்பதை கட்சித்தலைமையிடம் கேட்டு முடிவு எடுத்து அறிவிப்போம்" என்று தெரிவித்தார்.