தீவுத் திடலில் சில்லறை விலையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்து வருகிறது.
தீபாவளியை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டுப்பாட்டில் உள்ள தீவுத் திடலில் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, தீவுத் திடல் வியாபாரிகள் சங்கம் சார்பில் பட்டாசு விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது குறைவான கடைகளே திறந்திருந்தன. நேற்றைய நிலவரப்படி சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகள் திறந்திருந்தன. பட்டாசுகளை வாங்க பொதுமக்களின் வரத்தும் காலையில் இருந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
இது தொடர்பாக தீவுத்திடல் வியாபாரிகள் சங்க காப்பாளர் டி.புனிதன் கூறியதாவது: பட்டாசுக் கடைகளை நடத்த போர் நினைவிடம் அருகில் அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, அக்டோபர் 26-ம் தேதி தான் முடிந்தது. அதன் பிறகே பட்டாசு விற்பனைக்கு அனுமதி கோரி வியாபாரிகள் விண்ணப்பித்தனர். முதல்கட்டமாக நேற்று முன்தினம் 8 பேருக்கு மட்டுமே பட்டாசு விற்க அனுமதி வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அதனால் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரு சில கடைகளே திறந்திருந்தன. இன்று (திங்கள்கிழமை) படிப்படியாக பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் 66 கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இப்பகுதியில் மட்டும் ரூ.26 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். தீபாவளி 10-ம் தேதி வரும் நிலையில், நவம்பர் 7, 8, 9 ஆகிய 3 நாட்களில் பட்டாசு விற்பனை பரபரப்பாக இருக்கும். இங்கு பல்வேறு நிறுவனங்களின் பட்டாசு வகைகள், குழந்தைகளுக்கான புதுப்புது பட்டாசு வகைகள் விற்பனைக்கு உள்ளன. இங்கு யாரும் சீனப் பட்டாசுகளை விற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுமட்டுமல்லாது அண்ணா நகர் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும் பட்டாசு விற்னை தொடங்கப்பட்டுள்ளது.